Saturday, February 7, 2015

நபிகள் நாயகத்தை கனவில் காண முடியுமா


மனிதன் தன் வாழ்வில் காணும் காட்சிகள், தன் நினைவில் நிற்கும் நினைவுகள் இவைகள் எல்லாம் அவனுக்குக் கனவாகத் தோன்றுவதைப் பார்க்கிறோம். நாம் ஒருவரை விரும்புகிறோம் என்றால் அவர் நம் கனவிலும் விருப்பத்திற்குரியவராகவே தோன்றுகிறார். நாம் ஒருவரை எதிரியாக, தீயவராக நினைக்கிறோம் என்றால் அந்நபர் நமக்குக் கனவிலும் தீயவராகவே தோன்றுகிறார். ஒவ்வொரு மனிதனின் சிந்தனை எப்படி இருக்கின்றதோ அதற்கேற்பவே கனவும் நிகழ்ந்து விடுகின்றது. சில வேளைகளில் இவனுடைய சிந்தனைக்கு அப்பாற்பட்டும் கனவுகளில் நிகழும். சில வேளைகளில் எந்தவித உதவியும் இல்லாமல் பறப்பதைப் போன்று கனவு காண்பான். ஆனால் உண்மையில் அவ்வாறு பறக்க முடியாது. மிருகங்கள் பேசுவதைப் போன்று கனவு காண்பான். ஆனால் மிருகங்கள் பேசாது என்பது தெரியும். இருந்தும் கூட உலக நியதிக்கு மாற்றமாக கனவு தோன்றி விடுகின்றது. மிகவும் அரிதாக ஏதாவது ஒன்றிரண்டு விஷயங்கள் கனவில் நமக்குத் தோன்றி எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்னறிவிப்பு செய்து விடுகின்றன. இந்த அறிவிப்பைக் கூட மனிதன் நேரடியாக காணும் போது தான் அவன் கண்ட கனவு உண்மை என்று நம்புவானே தவிர நிகழ்வைக் காண்பதற்கு முன்னர் கனவை உண்மை என்று நம்ப மாட்டான். ஏனென்றால் கனவில் காண்பதெல்லாம் நிகழ்ந்து விடாது என்பதை எல்லா மனிதனும் ஏற்றுக் கொண்டுள்ளான். இப்படி கனவு என்பது அவரவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப தோன்றுகின்றது. எண்ணங்களுக்கு அப்பாற்பட்டும் தோன்றுகின்றது. நிகழ்வதற்கு சாத்தியமற்ற விஷயங்களும் தோன்றுகின்றன. இவ்வளவு சிக்கல் நிறைந்த கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காண முடியும் என்று நினைப்பது பல குழப்பங்களுக்கு வழி வகுக்கும். நம்முடைய இஸ்லாமிய சகோதரர்கள் இந்தச் செயலுக்கு மார்க்கத்தில் அங்கீகாரம் உண்டா? நாம் எதைச் சொல்கிறோம்? இந்தச் சொல் சரியானதா? என்று நினைத்துப் பார்க்காமல் மனம் சொல்வதையெல்லாம் சொல்லி விடுகின்றனர். மார்க்கத்தைக் கற்றறிந்த அறிஞர்கள் கூட தவறான வாசகங்களை உபயோகித்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றார்கள். மக்கள் நேர்வழி பெறுவதும் வழி கெடுவதும் மார்க்க அறிஞர்கள் கையில் தான் இருக்கின்றது. எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "எனது உம்மத்தில் வழிகெடுக்கக் கூடிய தலைவர்களை நான் பயப்படுகின்றேன்'' என்று கூறினார்கள். எனவே மக்கள் தவறாக விளங்கி செயல்படுவதற்கு இவர்களே காரணமாகவும் அமைந்து விடுகின்றார்கள். இவ்வாறு, சொல்வதை விளங்காத காரணத்தினால் தான் மவ்லித் போன்ற பித்அத்தான காரியங்கள் தோன்றின. இன்னும் சிலர் பெருமானாரின் பிரியத்தைப் பெற வேண்டும் என்பதற்காக பயன்படுத்தக் கூடாத, மார்க்கம் தடுத்த சில வார்த்தைகளைப் பயன்படுத்தி விடுகின்றனர். இதனால் இந்த வார்த்தைகளைச் சொல்பவர்கள் (அதன் பொருளை உணராவிட்டாலும்) இணை வைத்தல் என்ற பெரும் பாவத்தைச் செய்தவர்களாகி விடுகின்றனர். இதுபோன்ற தொடர்களில் உள்ளது தான் "இறைவா! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவிலும் நினைவிலும் காணும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!'' எனும் வாக்கியமாகும். கனவின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் ஒரு மனிதரை நாம் நேரில் பார்த்திருந்தால் தான் அவரைக் கனவிலும் பார்க்க முடியும். அப்படியிருக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேரடியாகப் பார்க்காமல் அவர்களைக் கனவில் காண வேண்டும் என்பது அபத்தமான விஷயமாகும். அப்படியே காண முடியும் என்று வைத்துக் கொண்டாலும், வந்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் என்று எப்படி அறிய முடியும்? ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியும் என்று கூறுபவர்கள், கனவில் வந்தவர் நபிகள் நாயகம் தான் என்பதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸை முன் வைக்கின்றார்கள். "என் வடிவத்தில் ஷைத்தான் தோன்ற மாட்டான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸை இதற்கு ஆதாரமாக முன் வைக்கின்றனர். இதுவும் கூட தவறான சிந்தனையாகும். ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என் உருவத்தில் ஷைத்தான் தோன்ற மாட்டான் என்று தான் கூறினார்களே தவிர, மற்றவர்கள் உருவத்தில் ஷைத்தான் வந்து, தான் நபி என்று கூற மாட்டான் என்று ஒருபோதும் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உருவத்தில் ஷைத்தான் வராவிட்டாலும் வேறு ஒருவரின் உருவத்தில் தோன்றி குழப்பதை விளைவிக்கலாம் அல்லவா! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவத்தைப் பற்றி ஹதீஸ்களில் வந்துள்ளது. எனவே இந்த ஹதீஸ்களின் உதவியால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உருவத்தைப் பார்க்க முடியுமல்லவா? அதைக் கனவில் காணலாமே என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அப்படிச் செய்தால் அது வெறும் யூகமே தவிர வேறொன்றும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உருவத்தை எவ்வளவு கணிணிகளைப் பயன்படுத்தி வரைந்தாலும் சரியான முறையில் வரைய முடியாது. வரைந்தாலும் அது வெறும் கற்பனை தான். வரையப்பட்ட உருவம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போல் உள்ளதா? என்பதை நம்மில் யாராலும் உறுதியாகக் கூற முடியாது. நபிகள் நாயகத்தை ஏற்கனவே கண்ட ஒருவர் தான் அதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் அப்படி யாரும் நம்மில் கிடையாது. ஹதீஸ்களில் வந்திருக்கும் வர்ணனைகளை வைத்து இப்படித் தான் இருப்பார்கள் என்று முடிவு செய்தாலும் கூட அதுவும் யூகம் தான். யூகத்தைப் பின்பற்றக் கூடாது என்று திருமறையும் நபிமொழியும் தெளிவாகவே கூறுகின்றன. "உனக்கு உறுதியாகத் தெரியாததை நீ பின்பற்றாதே!'' (17:36) என்று திருக்குர்ஆனும், "உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதை விட்டு விட்டு சந்தேகத்தை ஏற்படுத்தாத விஷயத்தை முன்னோக்கு'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறுகின்றார்கள். இப்படியிருக்க நாம் கற்பனையாக ஓர் உருவத்தை வரைந்து விட்டு இது தான் நபிகள் நாயகம் என்று சொல்வது மாபெரும் குழப்பத்தை விளைவிக்கும். எனவே யூகத்தை ஒதுக்கித் தள்ளுவது அவசியம் என்பது இந்த ஹதீஸின் மூலம் நமக்குத் தெரிகின்றது. "என்னை யார் கனவில் கண்டாரோ அவர் என்னை விழிப்பிலும் காண்பார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை நபிகள் நாயகத்தைக் கனவில் காண முடியும் என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். இதுவும் தவறான வாதமாகும். ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரில் வருவார்கள் என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக்கும் குர்ஆனுக்கும் மாற்றமானதாகும். இறந்தவர்கள் திரும்ப வர முடியாது, நான் நல்லமல் செய்யப் போகின்றேன் என்று கெஞ்சினால் கூட அனுமதி கிடைக்காது என்று தான் குர்ஆன் கூறுகின்றது. "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது. (அல்குர்ஆன் 23:100) இதுபோல் நல்லவர்கள் தனக்குக் கிடைத்த வெற்றியை தன் குடும்பத்தினரிடத்தில் சொல்வதற்கு அனுமதி கேட்டால் கூட அல்லாஹ் அனுமதி வழங்க மாட்டான் என்றும் மார்க்கம் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் நினைவில் வருவார்கள் என்றால் அது குர்ஆன் கூறும் கருத்துக்கு மாற்றமாக உள்ளது. யார் எப்போது நினைத்தாலும் உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்சி தருவார்கள் என்று நம்புவது இணை வைத்தலாகும். கிறித்தவர்கள் தான் இயேசு காட்சி தருவார் என்று கூறுவார்கள். நபிகள் நாயகம் சொல்லாததை நாம் சொன்னால் நமக்கும் கிறித்தவர்களுக்கும் வேறுபாடின்றிப் போய் விடுகின்றது. எனவே கனவில் காட்சி தருவார் என்று சொல்வதை விட நினைவில் காட்சி தருவார் என்று கூறுவது மிகப் பெரிய பாவமாகும். விழிப்பிலும் என்னைக் காண்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் கருத்து, அவர்களது காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டும் தான் பொருந்தும். அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேரில் பார்த்த ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டாரேயானால், அவர் விழித்தபிறகு மீண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாமல் இருக்க மாட்டார் என்பது தான் இந்த ஹதீஸின் பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேரில் சந்திப்பதற்கு, கனவு ஒரு அறிவிப்பாகத் தான் அந்த மக்களுக்கு இருந்தது. இன்னும் சில நபர்கள், விழிப்பில் என்னைப் பார்ப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதற்கு மறுமை நாளில் பார்ப்பார் என்று விளக்கம் கூறுகின்றனர். இதுவும் தவறான கருத்தாகும். ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் பார்த்தவர்கள் தான் பார்ப்பார்கள் என்றால் மற்ற நல்லவர்கள் எல்லாம் பார்க்க மாட்டார்களா? கனவில் பார்த்தவர்களும் பார்க்காதவர்களும் எல்லோருமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மறுமையில் பார்ப்பார்கள். இவ்வளவு வாதங்களும் பிரச்சனைகளும் ஏன்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமுகத்தைக் கனவில் கண்டு விடுவதால் ஒரு மிகப் பெரிய பாக்கியம் இருக்கின்றது என்றால், நேரடியாக - கண்கூடாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமுகத்தை அன்றாட வாழ்வில் சாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருந்த அபூலஹப், அபூஜஹ்ல் ஆகியோர் எல்லாம் இஸ்லாத்தில் இணையும் பாக்கியத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது திருமுகத்தை நேரடியாகப் பார்த்துள்ள அபூலஹபை அல்லாஹ் சபித்து ஓர் அத்தியாயத்தை இறக்கி விட்டானே! மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இஸ்லாத்தின் ஆரம்பத்தில் ஓர் உறுதுணை இருந்தது என்று சொன்னால் அது அபூதாலிப் அவர்கள் தான். அபூதாலிப் உயிருடன் இருக்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை யாராலும் எதுவும் செய்ய இயலவில்லை. எல்லா விஷயங்களிலும் மிக்க உறுதுணையாக நின்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட, நீங்கள் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று மட்டும் கூறி விடுங்கள். மற்ற அனைத்தையும் அல்லாஹ்விடம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்கள். இந்த அளவுக்கு நெருக்கத்தைப் பெற்று, ஒன்றோடு ஒன்றாக இருந்து அவர்களின் திருமுகத்தை நேரடியாகப் பார்த்த அபூதாலிபிற்கே வெற்றி இல்லை என்றால் நபிகள் பெருமானாரை கனவில் பார்ப்பதனால் என்ன சிறப்பு இருக்கின்றது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்ப்பதால் சிறப்பு கிடைக்கும் என்று நம்புவது எப்படி அறிவார்ந்த, சிறப்பம்சம் பொருந்திய காரியமாக ஆக முடியும். மவ்லித் ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகை தருகின்றார்கள் என்று நினைத்து, எழுந்து நின்று ஓதுவதை எப்படி தவறு என்று நினைக்கின்றோமோ அதே போன்று இதுவும் தவறாகும். இவ்வாறு அர்த்தமற்ற செயல்களைச் செய்வதாலோ சொல்வதாலோ எந்தச் சிறப்பும் ஏற்படப் போவதில்லை. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நம்பிக்கை கொண்டு அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிப்படி நடப்பதில் தான் சிறப்பு இருக்கின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட தமது தோழரிடத்தில், "உங்களுக்குப் பின்னால் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் என்னைப் பார்க்காமலேயே என்னை ஈமான் கொண்டு செயல்படுவார்கள்'' என்று புகழ்ந்து கூறியிருக்கின்றார்கள். எனவே சிறப்பு என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்ப்பதை விடப் பின்பற்றுவதில் தான் இருக்கின்றது. அல்லாஹ் தான் வலிமை மிக்கவன் ஆயிற்றே! அவன் தான் நாடியவற்றையெல்லாம் செய்பவன் அல்லவா! எனவே அவனிடம் நபிகள் நாயகத்தைக் கனவில் காட்டும் பாக்கியத்தைக் கேட்டால் அவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நமது கனவில் காட்ட முடியாதா? என்ற எண்ணம் கூட நம்மில் பலருக்கு ஏற்படும். பிரார்த்தனை என்றால் அதற்கென்று ஒரு குறிப்பிட்ட வரையறை உள்ளது. இறந்தவர்கள் பூமிக்கு வர முடியாது என்று தெளிவாகக் கூறி விட்ட பிறகு அல்லாஹ்விடம், இறந்தவர்களை பூமிக்குத் திரும்ப அனுப்பு என்று கேட்பது மிகப் பெரும் தவறாகும். உதாரணமாக லஞ்சம் வாங்கக் கூடாது என்று அரசாங்கம் உத்தரவு போட்டிருக்கும் போது, அரசாங்கத்திடமே போய் லஞ்சம் வாங்குவதற்கு அனுமதி வேண்டும் என்று கேட்பதை அறிவுக்குப் பொருத்தமான விஷயம் என்று யாரும் கூற மாட்டோம். லஞ்சம் வாங்கக் கூடாது என்று கூறிய அரசாங்கமே லஞ்சம் வாங்குவதற்கு அனுமதியளிக்குமா? அனுமதி வழங்க அரசாங்கத்தால் முடியும் என்றால் கூட அவ்வாறு அனுமதி வழங்குவதில்லை. இதுபோன்று இறைவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நினைவில் கொண்டு வந்து நிறுத்த முடியும். என்றாலும் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று திருமறையில் திட்டவட்டமாகக் கூறி விட்டான். இதன் பிறகும் நாம் அல்லாஹ்விடம் தானே கேட்கிறோம் என்று நினைத்து யாரும் இது போன்ற பிரார்த்தனைகளை செய்யக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூட இவ்வாறு வரம்பு மீறி பிரார்த்தனை செய்வதைத் தடுத்துள்ளார்கள். "உளூவிலும் பிரார்த்தனையிலும் வரம்பு மீறும் கூட்டம் தோன்றுவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் கூறியது போலவே இன்று மார்க்க அறிஞர்களே பிரார்த்தனையில் வரம்பு மீறுகின்றார்கள். பிரார்த்தனையில், "இறைவா! எனக்குச் சுவனத்தில் வலது பகுதியைக் கொடு'' என்று கேட்பது கூட வரம்பு மீறுதலாகும் என்று ஹதீஸில் வந்துள்ளது. அப்படியிருக்க அல்லாஹ் தடுத்திருப்பதையே கேட்பது எவ்வளவு பெரிய வரம்பு மீறுதல் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும் செயலில் மட்டும் ஏகத்துவம் இருப்பது போதுமானதல்ல! மாறாக சொல்லிலும் கூட ஏகத்துவம் இருக்க வேண்டும். சொல்லிலும் செயலிலும் ஏகத்துவத்தைக் கடைப்பிடிக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் ஏக இறைவன் தந்தருள்வானாக! குறிப்பு : 2004 ஆகஸ்ட் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

No comments:

Post a Comment


நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்?


முன்னால் அமெரிக்க நடிகை ''ஸாரா போக்கர்''
Niqab is the new symbol of woman's liberation.

[ நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்.உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது.
எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது.பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான். நீச்சலுடை அல்ல. - முன்னால் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர் ]
அமெரிக்காவின் இதயப்பகுதியில் பிறந்த அமெரிக்கப்பெண் நான். மற்றவர்களைப்போல் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு, தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக வாழ்வைத்தேடி ஓடினேன்.
ஒரு சாதாரண மேற்கத்திய பெண் எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன்; ஆம்! என் அழகின்மீது அதிக ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான் வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன். எனது அழகான தோற்றமே என்னை பிணைக்கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.
நாகரீக வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கையின் தேவைகளுக்கான பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா? என்னுடைய மன வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன?
செப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான் இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலச்சாரத்தைப்பற்றி, அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம் என்றாலே பெண்களை ''கூடாரத்துக்குள்'' அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம், மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம், பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன்.
அப்பொழுதுதான் ஒருநாள் திருக்குர்ஆனை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே மாதிரியான மேற்கத்திய கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
இதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என் ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்) ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன். இறுதியாக உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன். கடைவீதிக்குச்சென்று நீளமான அழகான 'கவுன்' ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள் தலையை மறைக்க அணியும் துணியையும் கட்டிக்கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. ஆம் சுதந்திரப்பெண்மணியாக இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டது போல், என்னை சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல் உணர்ந்தேன்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.அதுமட்டுமின்றி எனது தோள்களில் இருந்து 'பெரிய சுமை' கீழிறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது. நான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக என்று உணர்ந்தேன்.
''பெண்களை அவமதிக்கும் மதம்'' என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை உளப்பூர்வமாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, இஸ்லாத்தை எனக்கு இன்னும் நெறுக்கமாக்கியது. முஸ்லீமான ஒருவரை நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் ஹிஜாபை (Hijab) அணிந்து கொண்டாலும் நிகாபை (Niqab) அணிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
எனது முஸ்லீம் கணவரிடம் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது 'ஹிஜாப்' அணிந்து கொள்வதுதான் பெண்களுக்கு கடமையே தவிர 'நிகாப்' அல்ல, என்றார். (ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் கை கால்கள் தவிர உடம்பின் மற்ற பகுதிகளை மறைப்பது, 'நிகாப்' என்பது முகத்தையும் மறைப்பது கண்களைத்தவிர)ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு என் கணவரிடம் மறுபடியும் எனது 'நிகாப்' இன் மீது உள்ள ஆசையை தெரிவித்தேன். இம்முறை நான் சொன்ன காரணத்தை அவரால் மட்டுமல்ல வேறு எவராலும் தட்ட முடியாது. ஆம்! என் பிரியமுள்ள கணவரிடம் சொன்னேன், "நான் 'நிகாப்' அணிவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும், அத்துடன் அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன அமைதியையும் அது அதிகப்படுத்தும் என்று நம்புகின்றேன்'' என்றேன்.
இம்முறை என் இனிய கணவர் என் கருத்துக்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி என்னை உடனே கடை வீதிக்கு அழைத்துச்சென்று அதனை வாங்கியும் கொடுத்து விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். அந்த ஒப்பாரியுடன் எகிப்து நாட்டு (!!!) அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு 'நிகாப்'' அணிவது பிற்போக்குத்தனம் என்று புலம்பித்தீர்த்தனர்.
பெண்களின் உரிமைக்காக போராடுவதில் நானும் சளைத்தவள் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம் பெண்மணியாக இருந்து பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான உரிமைகளுக்காக போராடுகிறேன். குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை முன்னிறுத்துகிறேன். நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவன்மார்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக, 'நிகாப்' அல்லது 'ஹிஜாப்' அணியும் நமது உரிமைக்காகப் போராடும் அதே வேளையில்; ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், ஏன் இது நமக்கு மிகவும் அவசியம் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் உரக்கச்சொல்வேன்.
எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது. அடித்துச்சொல்வேன் பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான் என்று.
சௌத் பீச்சில் என் நீச்சலுடையையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழும் ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதில்தான் எனக்கு அளவிலா மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கிறது. அதனால்தான் நான் 'நிகாப்' அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் தயார் தான். நேற்றுவரை நீச்சலுடையை பெண்ணினத்தின் சுதந்திரக் குறியீடாக நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு. பெண் விடுதலையின் குறியீடு 'நிகாப்'தான். அது கொடுக்கும் கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்களே, ''நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள்.''
தமிழ் மொழியாக்கம் . எம்.ஏ. முஹம்மது அலீ,
adm. www.nidur.info
[ Sara Bokker is a former actress, model, fitness instructor, and activist. Currently, Sara is director of communications at The March for Justice, a cofounder of The Global Sisters Network, and producer of the infamous Shock & Awe Galleryய©.]
For read in English please click below
:
http://www.nidur.info/en/index.php?option=com_content&view=article&id=153:why-i-shed-bikini-for-niqab-former-actress-sara-bokker-&catid=20:stories-of-new-muslims&Itemid=24

பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் யுவான் ரிட்லியைக் கவர்ந்த இஸ்லாம்


[''நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன். செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.
தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டும் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டபோது என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன்.... எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன்.
நான் படிக்கப்படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன்.
மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ]
அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகள் எவ்வளவுதான் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறான பிரச்சாரங்களை மேற்க்கொண்டாலும் இஸ்லாத்தின் அன்பு மற்றும் சமாதானத்தின் நற்செய்தி மக்களால் அடையாளம் காணப்படும் ஒரு நாள் வந்தே தீரும் என பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி கூறினார்.
கேரள மாநிலம் குற்றிப்புரம் ஸஃபா நகரில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் மாநாட்டை துவக்கி வைக்கவிருந்தார் அவர். ஆனால் லண்டனில் இந்திய தூதரகம் அவருக்கு இந்தியா செல்ல விசா மறுத்ததால் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமாக மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். "அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை ஆக்கிரமிப்புகளையும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளையும் மறைப்பதற்காகத்தான் இந்தப்பிரச்சாரத்தை மேற்க்கொள்கிறார்கள்.ஃபலஸ்தீனில் துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்பதற்காகவே என்னை ஏகாதிபத்திய சக்திகள் நோட்டமிடுகின்றன. ஃபலஸ்தீனிலும், ஆஃப்கானிலும், ஈராக்கிலும் கொடூரமான தாக்குதல்கள் மூலமும், கூட்டுக்கொலைகள் மூலமும் குண்டுகளை வீசுவதன் மூலமும் முஸ்லிம்களின் மீது நிரந்தரமாக ஏகாதிபத்திய சக்திகள் போரிட்டு வருகின்றன.
இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்ற மேற்கத்திய வாதிகளின் பொய் பிரச்சாரம் வெற்றிப்பெறாது. ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் வசம் சிக்கிய என்னை இஸ்லாத்தை நோக்கி திருப்பியது அவர்களுடைய கண்ணியமான நடவடிக்கைகளும் சுத்தமான நிலைபாடுகளும் தான். இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்றால் தாலிபான் போராளிகள் என்னிடம் ஒருபோது கண்ணியமாக நடந்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மேலும் எனது வாழ்வில் அது திருப்புமுனையும் ஆகியிருக்காது.
ஏகாதிபத்தியமும், சியோனிஷமுதான் இன்று உலகம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள். இவ்விரண்டு சக்திகளும் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல விரோதிகள் மனிதர்கள் அனைவருக்குமே விரோதிகள் தான். முஸ்லிம் பெண்கள் காலக்கட்டத்தின் சவால்களை புரிந்துக்கொண்டு களமிறங்கவேண்டும்." இவ்வாறு ரிட்லி உரையாற்றினார்
தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்....''நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.
செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.
தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.
என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு ''கெட்ட பெண்'' என்று அழைத்தார்கள். ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையான போது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை'' நானா? அல்லது அவர்களா?)
எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன்.
நான் படிக்கப்படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்ஆனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன்.
எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, ஏமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது.
இன்று! மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது என்னை ஏமாற்றமும், அச்சமும் கொள்ள வைக்கிறது. இவருக்கு பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் இத்தாலியப் பிரதமர் ரெமானோ ப்ரோடி ஆகியோர் வேறு ஆதரவளிக்கின்றனர் என்பதுதான் வேடிக்கையான வேதனை.புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.
ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும், கட்டாயத் திருமணங்கள் பற்றியும் இவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் இவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். இவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு இவர்களது அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.
மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும்.
மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.
இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்?
பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் ஆகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.
நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன், அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன்.
ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. ''வாடகைக்கு'' என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள்.
நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். ஆனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான்.
மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் ''பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே'' என்றும் ''பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?'' என்றும் கமெண்ட் அடித்தான்.
ஆம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் - அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உடை அணிகின்றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள், அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன்! வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸான பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! - அதுபோலத்தான் இதுவும்.
நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணிய வாதியாகத்தான் இருந்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன்.. முஸ்லிம் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003-ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் உடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.
ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். இந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை.
இவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், எஸ்.எம். எஸ். தகவல்கள் மற்றும் ரேடியோ ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?
இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும், கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது.. இஸ்லாத்தின் இந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.
இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. இது மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்ஸ. National Domestic Violence Survey நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.
ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி அடிக்க அனுமதிக்கிறது இஸ்லாம் என்ற கூற்றை எடுத்துக் கொண்டால் - இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி குர்ஆன் வசனங்களையும், நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர்.
ஆனால் அந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் இது. ஒர் ஆண் தனது மனைவியை அடிக்கத்தான் வேண்டுமாயின், அவளது உடலில் எவ்விதக் காயமோ அடையாளமோ இல்லாமல்தான் அடிக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது. இது குர்ஆனுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும். இதன் உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்... முட்டாளே! உனது மனைவியை அடிக்காதே!! என்பதுதான்.
இதற்கு மேலும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்:
அமெரிக்காவின் ஆன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992-ல் கூறிய கருத்து இதோ: ''பெண் விடுதலை என்பது சமூக சீர்கேட்டை உருவாக்கி, குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து, கணவர்களை விட்டு ஒடுகின்ற, தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற, ஒரினச் சேர்க்கையில் பெண்களை ஈடுபடுத்துகின்ற ஓர் இயக்கமாகும்''. இப்போது சொல்லுங்கள்! யார் நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்? என்று.